முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறப்புடையது

இடங்கழி நாயனார்

 புதுக்கோட்டை சமஸ்தானத்தில் கோநாடு, காநாடு என்ற இரு பிரிவுகள் இருந்தன. கோ நாட்டின் தலைநகராக விளங்கியது கொடும்பாளூர் ஆகும். கோவலன் வரலாற்றில் கொடும்பை என்று வர்ணிக்கப்படும் ஊர்தான் கொடும்பாளூர் ஆகும். இவ்வூர் திருச்சிராப்பள்ளி வழி விராலிமலை வழியே மதுரை செல்லும் வழியில் புதுக்கோட்டை மணப்பாறை சாலை சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. மதுரை ராணி மங்கம்மாள் இவ்வூரில் சத்திரம் ஒன்றையும் கட்டியுள்ளார். இந்த கொடும்பாளூர், வேளிர் மன்னர்களின் தலைநகராக இருந்தது, கொடும்பாளூர் வேளிர்களும், முத்தரையர்ககளும் மண உறவில் இருந்ததையும் சூரியவம்சமான  சோழர்களுடனும் இவர்கள் இணைந்து இருந்தனர் என்பதையும் வரலாறு உறுதிப்படுத்துகின்றது. இவர்களின் உறவை வரகுணனாட்டி தென்னவன் இளங்கோ முத்தரையன் என்ற தலைப்புகளிலும் காணலாம். முத்தரையர்கள் முற்கால சோழர்கள் என்பதும் இவர்கள் சூரிய வம்சத்தினர் என்பதையும் வரலாற்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய சூரிய வம்சத்தில் பிறந்தவர் மன்னர் இடங்கழி நாயனார் ஆவார் என்று அபிதான சிந்தாமணி நூல் விளக்குகிறது. இவன் விஜயாலயச் சோழன் குடிப்பிறந்தவன் என்பதை பெரிய புராணமும் கூறுகிறது. ...

ஆனாய நாயனார்

 சோழவளநாட்டு மேன்மழநாடு மண்ணுலகிற்கு அருங்கலம் போன்றது. அது மங்கலமாகியது திருமங்கலம் என்ற மூதூர். அம்மூதூரில் வாழும் பெருங்குடிகளுள் ஒன்றாகிய ஆயர் குலத்தின் குலவிளக்குப்போல ஆனாயர் என்ற பெரியார் அவதரித்தார். அவர் தூய திருநீற்றினை விரும்பும் திருத்தொண்டில் நின்றவர். 




மனம், மொழி, மெய் என்ற முக்கரணங்களாலும் சிவபெருமான் திருவடிகளை அல்லாது வேறு ஒன்றினையும் பேணாதவர்; தமது குலத்தொழிலாகிய பசுக்காத்தலைச் செய்பவர்.


 பசுக்களைச் சேர்த்து, அகன்ற புல்வெளியிற் கொண்டு சென்று, அச்சமும், நோயும் அணுகாமற் காத்து, அவை விரும்பிய நல்ல புல்லும், நன்னீரும் ஊட்டிப் பெருகுமாறு காத்து வருவார். 


இளங்கன்றுகள், பால்மறை தாயிளம்பசு, கறவைப்பசு, சினைப்பசு, புனிற்றுப்பசு , விடைக்குலம்  என்பனவாக அவற்றை வெவ்வேறாக பகுத்துக் காவல் புரிவார். ஏவலாளர்கள் அவர் எண்ணிய வண்ணம் பணிவிடை செய்பவர்.


 தாம் பசுக்களை மேயவிட்டு, புல்லாங்குழலிலே பெருமானரது அஞ்செழுத்தைப் பொருளாகக் கொண்ட கீதமிசைத்து இன்புற்றிருபபர்.


இப்படி நியதியாக ஒழுகுபவர், ஒருநாள், தமது குடுமியிற் கண்ணி  செருகி, நறுவிலி புனைந்து, கருஞ்சுருளின் புறங்காட்டி, வெண்காந்தப்பசிய இலைச்சுருளிற் செங்காந்தட் பூவினை வைத்துக் காதில் அணிந்து, கண்டோர் மனம் கவரத் திருநெற்றியில் திருநீற்றினை ஒளிபெறச் சாத்தி, அதனைத் திருமேனியிலும் மார்பிலும் பூசி, முல்லை மாலை அணிந்து, இடையில் மரவுரி உடுத்து அதன்மேல் தழைப்பூம்பட்டு மேலாடையினை அசையக் கட்டி, திருவடியில் செருப்புப் பூண்டு, கையினில் மென்கோலும் வேய்ங்குழலும் விளங்கக் கொண்டு, கோவலரும், ஆவினமும் சூழப் பசுக்காக்கச் சென்றார். சென்ற அவர் அங்கு மாலை தொடுத்தது போன்ற பூங்கொத்துக்களும், புரிசடை போல் தொங்கும் கனிகளும் நிறைந்த ஒரு கொன்றையினைக் கண்டார்.










 அது மனத்துள்ளே எப்பொழுதும் கண்டுகொண்டிருந்த கொன்றை மாலை சூடிய சிவபெருமானைப் போல அவருக்குத் தோன்றிற்று. 


தோன்றவே அதனை எதிர்நோக்கி நின்று உருகினார். ஒன்றுபட்ட சிந்தையில் ஊன்றிய அன்பு தம்மை உடையவர்பால் மடைதிறந்த நீர்போல் பெருகிற்று. 






அன்பு உள்ளூறிப் பொங்கிய அமுத இசைக்குழல் ஓசையில் சிவபெருமானது திருவைந்தெழுத்தினையும் உள்ளுறையாக அமைத்து, எல்லா உயிர்களும் எலும்புங் கரையும்படி வாசிக்கத் தொடங்கினார், நூல் விதிப்படி அமைந்த வங்கியம் என்னும் வேய்ங்குழல் தனித் துறையில், ஆனாயார் மணி அதரம் பொருந்த வைத்து, ஏழிசை முறைப்படி இசை இலக்கணம் எல்லாம் அமையச் செய்து, திருவைந்தெழுத்தை உள்ளுறையாகக் கொண்ட வேய்ங்குழல் இசை ஒலியை எம்மருங்கும் பரப்பினார்.






அது கற்பகப்பூந்தேனும் தேவாவமுதமும் கலந்து வார்ப்பது போல எல்லா உயிர்களுக்குள்ளும் புகுந்து உருக்கிற்று.


மடிமுட்டி பால் குடித்து நின்ற பசுக்கன்றுகள் பால் நுரையுடன் அவர் பக்கத்தில் வந்து கூடின. எருதுக் கூட்டங்களும் காட்டுவிலங்குகளும் இசைவயப்பட்டுத் தம் உணவு மறந்து மயிர்சிலித்து வந்து சேர்ந்தன. 














ஆடும் மயிலினமும் மற்றைய பறவை இனமும் தம்மை மறந்து நிறைந்த உள்ளமோடு பறந்து வந்தணைந்தன (வந்து சேர்ந்தன). ஏவல்புரி கோவலரும் தமது தொழில் செய்வதை மறந்து நின்றனர். பாதலத்தின் நாகர்கள் மலையில் வாழ் அரசமகளிர், விஞ்சையர், கின்னரர் முதலிய தேவகணங்கள் – தேவமாதர்கள் என்றிவர்களும் குழலிசையின் வசப்பட்டவராகித் தத்தம் உலகங்களின்றும் வந்து அணைந்தனர்.














 நலிவாரும், மெலிவாரும், தம்மியல்பு மறந்து இசையுணர்வினாலாகிய உணர்ச்சி ஒன்றேயாகிநயத்தலினால் பாம்பும், மயிலும், சிங்கமும், யானையும், புலியும் மானும் 


என்றித் திறத்தனவாகிய உயிர்வகைகள் தத்தமது பகைமையை மறந்து, ஒன்று சேர்ந்து வந்து கூடின.








 காற்றும் அசையா, மரமும் சலியா, மலைவீழ் அருவிகளும் காட்டாறும் பாய்ந்தோடா, வான்முகிலும் ஆழ்கடலும் அசையா, இவ்வாறு நிற்பனவும், இயங்குவனவும் ஆகிய எல்லாம் இசைமயமாகி ஐம்புலனும் அந்தக் கரணமும் ஒன்றாயின.










ஆனாயர் இசைத்த குழலிசையானது, வையத்தை நிறைத்தது; வானத்தையும் தன் வசமாக்கிற்று. இதற்கெல்லாம் மேலாக இறைவரது திருச்செவியின் அருகணையவும் பெருகிற்று. சிவபெருமான் இடப வாகனத்தின்மேல் உமையம்மையாருடன் எழுந்தருளி எதிர்நின்று காட்சி தந்தனர். 








அக்குழல் வாசனையை என்றும் கேட்பதற்கு “இந்நின்ற நிலையே பூமழை பொழிய, முனிவர்கள் துதிக்கக் குழல் வாசித்துக்கொண்டே அந்நின்ற நிலையோடு ஆனாயநாயனார் அரனாரின் அருகு அணைந்தார்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்