இடங்கழி நாயனார்
புதுக்கோட்டை சமஸ்தானத்தில் கோநாடு, காநாடு என்ற இரு பிரிவுகள் இருந்தன. கோ நாட்டின் தலைநகராக விளங்கியது கொடும்பாளூர் ஆகும். கோவலன் வரலாற்றில் கொடும்பை என்று வர்ணிக்கப்படும் ஊர்தான் கொடும்பாளூர் ஆகும். இவ்வூர் திருச்சிராப்பள்ளி வழி விராலிமலை வழியே மதுரை செல்லும் வழியில் புதுக்கோட்டை மணப்பாறை சாலை சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. மதுரை ராணி மங்கம்மாள் இவ்வூரில் சத்திரம் ஒன்றையும் கட்டியுள்ளார். இந்த கொடும்பாளூர், வேளிர் மன்னர்களின் தலைநகராக இருந்தது, கொடும்பாளூர் வேளிர்களும், முத்தரையர்ககளும் மண உறவில் இருந்ததையும் சூரியவம்சமான சோழர்களுடனும் இவர்கள் இணைந்து இருந்தனர் என்பதையும் வரலாறு உறுதிப்படுத்துகின்றது. இவர்களின் உறவை வரகுணனாட்டி தென்னவன் இளங்கோ முத்தரையன் என்ற தலைப்புகளிலும் காணலாம். முத்தரையர்கள் முற்கால சோழர்கள் என்பதும் இவர்கள் சூரிய வம்சத்தினர் என்பதையும் வரலாற்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய சூரிய வம்சத்தில் பிறந்தவர் மன்னர் இடங்கழி நாயனார் ஆவார் என்று அபிதான சிந்தாமணி நூல் விளக்குகிறது. இவன் விஜயாலயச் சோழன் குடிப்பிறந்தவன் என்பதை பெரிய புராணமும் கூறுகிறது. ...